வேலூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரியார் பூங்கா அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாகும். இந்த பூங்காவின் வாகன நிறுத்தத்தில், நேற்று (பிப். 17) இரவு 8.00 மணி அளவில் பெண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தலையில் வெட்டுக் காயங்களுடன் இருந்தவர் லத்தேரியை அடுத்த தொண்டான்துளதி பகுதியைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் மனைவி கீதா (40) என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கீதா யாரால்? எதற்காக? தாக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனைர்.
இதையும் படிங்க: பள்ளிக்கு செல்ல அறிவுறுத்திய தாய்: விரக்தியில் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை