வேலூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைதலைவர் கே.எஸ். நரேந்திரன் வேலூரில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்தப் பேசினார். அப்போது, சீமான் போன்றவர்களே இங்கு கட்சி நடத்தும்போது ரஜினி கட்சி தொடங்குவதில் என்ன தவறு இருக்கிறது என தெரிவித்தார்.
திமுக- காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஆதார விலையை பாஜக அரசு உயர்த்தி வழங்கியுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அவர், டெல்லியில் கலவரத்தை உண்டாக்க பிரிவினைவாத சக்திகளுடன் காங்கிரஸ் திமுக இணைந்து முயற்சி எடுத்துவருவதாகத் தெரிவித்தார்.
இடைத்தரகர்களை ஒழிக்கவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப், ஹரியானாவில் உள்ள இடைத்தரகர்களும், சில அரசியல் குடும்பங்களும் இணைந்து டெல்லியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்திவருவதாக குற்றஞ்சாட்டினார்.
கமல்ஹாசன் நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பாக பதிவிட்ட ட்வீட் குறித்து அவர் கருத்துத் தெரிவித்த போது, இன்னும் எத்தனை நாளைக்கு சினிமா வசனத்தை அவர் பேசப்போகிறார் என்றும் அவர் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கமல் பேசிவருவதாக கூறிய அவர், கோடி ரூபாய் மதிப்பிலான காரில் அவர் செல்லும்போது பசி,பட்டினி குறித்து தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 'சாதி, மத வெறியர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கிறார்கள்' - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு