வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (45). இவர் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, திருவிழா நடைபெற இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும்படி பழனியிடம் ஊர் பொதுமக்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பழனி, அந்த இடம் தனக்கு சொந்தம் எனக்கூறி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி கிராம மக்கள் 12 பேர் மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது அங்கு நேரம் பரபரப்பு நிலவியது.