வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (64), இவரது கணவர் சின்னராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த புஷ்பா சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற புஷ்பா மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் வீரராகவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள தனியார் பெண்கள் காப்பக பணியாளர்கள் அம்மாநிலத்திலிருந்த புஷ்பாவை மீட்டு விசாரணை செய்தனர். ஆனால் அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. அவரிடம் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை இருந்தது. அதில் இருக்கும் முகவரியை பார்த்தபோது, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து உடனே அந்த தொண்டு நிறுவனம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் புஷ்பாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சத்தீஸ்கரில் உள்ள அந்தத் தொண்டு நிறுவன ஊழியர்கள் இன்று ஜோலார்பேட்டை காவலர் பழனி முன்னிலையில் புஷ்பாவை அவரது மகன் வீரராகவனிடம் ஒப்படைத்தனர்.
மனநலம் பாதித்த புஷ்பா, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஏறி சத்தீஸ்கர் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.