வேலூர் ஆபீசர் காலனி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி விழாவைத் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் பசுமை இயக்கம் சார்பாக நடைபெற்ற பல்வேறு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இவ்விழாவில் பேசிய அமைச்சர் வீரமணி, ' மரங்களை நடுவதற்கு குறிப்பிட்ட கால நேரம் என்பது கிடையாது. எனவே தொடர்ந்து மரங்களை நட மாணவர்கள் முன்வரவேண்டும். மேலும், மாணவர்களுக்கு பெற்றோர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மரங்களை நடுவதற்கு அரசு எந்நேரமும் தேவையான உதவிகளை அளித்து உறுதுணையாக இருக்கும். மரங்களை வளர்த்தால் நமக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறமுடியும். அதுமட்டுமல்லாமல் வருங்கால சமுதாயத்தினர் ஆரோக்கியமாக வாழவும்; போதிய அளவில் மழை பெய்யவும் வழிவகுக்கும்.
வேலூர் கல்வித்துறை கடந்த ஆண்டில் 165 பள்ளிகள் மூலம் 3 லட்சத்து 35 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 138 பள்ளிகள் மூலமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு புரிதல் ஏற்பட ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வர வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:பெண்ணிடம் பெரும் தொகையைப் பறித்துச் சென்ற கும்பல்! சிசிடிவி காட்சிகள்...