வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி கடைக்கு அழைத்துச் சென்று விஜயகுமார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனிடையே, சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடியபோது வீட்டின் அருகில் சிறுமி கண்ணீருடன் அழுதபடி நின்றுகொண்டிருந்தார். அதைக் கண்ட பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செல்வம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி விஜயகுமாருக்கு குழந்தை கடத்தல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 1,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும் நீதிபதி செல்வம் அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி விஜயகுமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10ஆண்டு சிறை