வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன்(64). இவர், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்தவர் என்பதால், எப்போதும் அதிக பணம் வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட பள்ளிகொண்டா அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(24) என்ற இளைஞர் காசிநாதனை அடிக்கடி பின்தொடர்ந்து சென்றுள்ளார். சில நேரங்களில் அவர் வைத்திருந்த பணம், நகைகளை கொள்ளையடிக்க முயற்சியும் செய்துள்ளார் என்று தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதியன்று, காசிநாதன் தனது நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அத்துமீறிச் சென்ற முத்துக்குமார், அருகில் கிடந்த கல்லை எடுத்து காசிநாதன் தலை மீது ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் காசிநாதன் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம், செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு முத்துக்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து பள்ளிகொண்டா காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி குணசேகர் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 3000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 65 வயது முதியவர் சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை!