வேலூர்: தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
அதில் ஒரு கைதியான கிருஷ்ணன் என்பவரது மகன் கவிமணி, தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவத் துறை சார்ந்த படிப்பு படித்துவந்துள்ளார்.
ஆனால், வறுமை காரணமாகப் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
இது குறித்த தகவல் வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினிக்கு சிறை நல அலுவலர் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக சிறைக் கண்காணிப்பாளர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், மாணவன் இரண்டு ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிறைக் கண்காணிப்பாளரின் செயலால், கைதியின் மகன் மீண்டும் கல்லூரி படிப்பைத் தொடர முடிந்தது.