வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார். அதேபோல், அதிமுக சார்பாகப் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இன்று தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் முன்னிலையில், அப்பகுதியில் சென்றவர்களை அழைத்து ஏதாவது ஒரு சீட்டை எடுக்கச்சொல்லி கிளி ஜோசியம் பார்த்து, பொதுமக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர்.
ஏற்கனவே, குடுகுடுப்புக்காரர் வேடமணிந்து திமுக தொண்டர் ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு ஒரு படி மேலாகச் சென்று கிளி ஜோசியம் பார்த்து வாக்கு சேகரிக்கும் அரிய முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.