வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் குறைதீர் மனுக்கள் பெறும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி, திமுக எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில், 'தனது தொகுதியில் பெறப்பட்ட மனுக்களில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும்; அம்பிகா என்பவருக்கு விதவை பென்ஷன் வழங்காததால் அவரது குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் மேடையில் அனைவர் முன்னிலையிலும்' குற்றச்சாட்டு வைத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் வீரமணி, சட்டென எழுந்து, ' திமுக எம்எல்ஏ விளம்பரத்திற்காகப் பேசுவதாகவும், ஆட்சியர் அருகில் இருக்கையில் இந்த விவகாரத்தை அனைவர் முன்னிலையிலும் பேச வேண்டிய அவசியமில்லை' என்பதுபோலவும் குறுக்கிட்டார்.
அப்போது எம்எல்ஏ நந்தகுமாருக்கும் அமைச்சர் வீரமணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதிமுகவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பேசிக்கொண்டிருந்த மைக்கை கீழே தள்ளினார். இதனால் அதிமுக தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனால் உடனடியாக காவல் துறையினர் மேடையில் ஏறி, மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பின்னர் விழா இயல்பாக நடைபெற்றது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால், அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது!