ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் அவரது வீடு மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் கணக்கில் வராத 3 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கமும், சுமார் 450 சவரன் தங்கம், 6.5 கிலோ வெள்ளி மற்றும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி பன்னீர் செல்வம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு நேற்று வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தன் முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.