நாள்தோறும் பல்வேறு அலுவல் பணிகளுக்கிடையே அரசு அலுவலர்கள் முறையாக வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அங்கன்வாடி மையங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் ஆகிய அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆட்சியர் கடந்த 27ஆம் தேதி சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது நீண்ட நாளாக விடுப்பிலிருந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், பசுமை வீடு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் பணிகள் குறித்த கோப்புகளைச் சரிபார்த்தார். குறிப்பிட்ட நாள்களுக்குள் முடிக்கப்படாத பணிகளை உடனடியாக முடிக்கும் படி உத்தரவிட்டார்.
தொடர்ந்து 38 ஊராட்சிகளில் சாலை குடிநீர் கழிப்பிட வசதிகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் வேலூரில் அரசு அலுவலர்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது ; 5 பேர் தலைமறைவு