வேலூர்: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.
இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான (Cyber crime) கணினி மூலம் ஏற்படும் குற்றங்கள் பற்றியும் சமூக வலைதளங்களில் ஏற்படும் பாலியல் வன்புணர்வுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து மாணவிகளாகிய நீங்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கான வயது, பக்குவம் குறைவாக இருக்கும். எனவே, தேவையில்லாத விஷயங்களில் தங்கள் மனதிள் ஆசைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
மாணவிகள் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். பயணிக்கும்போது பல்வேறு இடையூறுகள் வரும், அப்போது கவனத்தை சிதறவிடாமல் உங்கள் குறிக்கோளை மட்டுமே மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வில் தற்காலிகமாக ஆசைகள் பல பிறக்கும். அதை புறந்தள்ளி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அவ்வாறு புறம்தள்ளி இலக்கை நோக்கி பயணித்தால் தான் சமுதாய கட்டமைப்பை மாணவிகள் ஆகிய உங்களால் உருவாக்க முடியும். அடுத்த இடத்திற்கு சமுதாயத்தை எடுத்துச்செல்வீர்கள். படிக்கும் வயதில் திருமணம் செய்து கொண்ட பல பேர் வாழ்க்கையில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆகவே, மாணவிகள் தவறான ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்" எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய, மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அபர்ணா, "அடையாளம் தெரியாத நபர்களுக்கு புகைப்படங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்ப வேண்டாம். முகப்பு பக்கமாகவும் வைக்க வேண்டாம். ஏதேனும் தங்களுக்கு மிரட்டல் வந்தால் தைரியமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தேவை இல்லாத மொபைல் ஆப்களை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதுவே பின்னாளில் உங்களுக்கு பிரச்னையாக அமையும். தங்களது அந்தரங்க புகைப்படங்களை போனில் வைத்துக்கொள்ள வேண்டாம். எக்காரணம் கொண்டும் நன்றாக தெரிந்த நபர்களுக்குக் கூட அனுப்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம்: அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்!