திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேவுள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தில் இரண்டாயிரத்து 35 மகளிர் குழுக்களுக்கு ரூபாய் 107 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன், உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் 100 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.
பின்னர் இவ்விழாவில் பேசிய அமைச்சர், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உயர் கல்வி வரை பயில தமிழ்நாடு அரசு பல்வேறு இலவச திட்டங்களைச் செயல்படுத்திவருவதாகவும், பெண்கள் கல்வியில் இடைநிற்றலைத் தவிர்க்க இலவச சைக்கிள், சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவே திருமண நிதி உதவித் தொகையை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவுள்ளதாகவும், ஆண்களைப் போலவே பெண்களும் பல்வேறு துறைகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மானியவிலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுவருவதாக கூறினார்.
மேலும் பெண் சிசுக்கொலை தடுப்பதற்காக தொட்டில் குழந்தைத் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் 50 ரூபாய் வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும், வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் 'வெல்மா' என்ற பெயரில் தாங்களாகவே 250 வகையான பொருள்களை உற்பத்திசெய்து விற்பனை செய்துவருகிறார்கள். இந்த உற்பத்திப் பொருள்கள் மேலும் அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பொருள்களை உற்பத்திசெய்ய வேண்டும் என அவர் கூறினார்.
இதையும் படிங்க:காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த எல்கேஜி, யுகேஜி பள்ளிக் குழந்தைகள்!