வேலூர்: பள்ளிகொண்டாவில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தனி பார்சல்கள் இருப்பதை கண்டு இது குறித்து வேன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் பார்சலை பிரித்து பார்த்துள்ளனர். அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான் மசாலாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழு நிமிடம் இடைவெளியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம்: சிசிடிவி காட்சி வெளியீடு