வேலூர் சைதாப்பேட்டை தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (35). இவர் வசந்தபுரத்தில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
தனது பணிக்காக வசந்தபுரம் செல்லும்போது ரயில்வே கேட் அருகே போடப்பட்டிருந்த கரோனா சிறப்பு முகாமைச் சேர்ந்த ஆள்கள் பாபுவை அழைத்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறியுள்ளனர். இதன் முடிவு இரண்டு நாள்களில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு நாள்களுக்கு பின் பாபுவின் சொல்போனுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஆனால் கடந்த திங்கள்கிழமை பாபுக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அதற்கு மூன்று நாள்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் கூறி 108 ஆம்புலென்ஸ் மூலம் வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாபு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும்போது, ''நான் வேலைக்கு செல்லும் போது டெஸ்ட் எடுத்தார்கள். எனது செல்போனுக்கு நெகட்டிவ் என மேசேஜ் வந்தது. ஆனால் என்னை அன்று மாலையே 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மேலும் 3 நாள்களில் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என கூறினார்கள். இன்றோடு ஆறு நாள்கள் ஆகப்போகிறது. இதுவரை மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. இதனால் தான் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்'' என்றார்.
மேலும் வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் போதிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் முறையாக கவனிப்பது இல்லை என்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவத் துறை துணை இயக்குநர் மதிவாணனிடம் கேட்ட போது, ''பாபு என்பவரை அழைத்து சென்றது குறித்து விசாரிக்கப்படும். மேலும் குறிஞ்செய்தி தவறாக அனுப்பியிருக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை முறையாக கவனிப்பது இல்லை என்ற புகாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பா பிள்ளையாரப்பா?’- வைரலாகும் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடியோ!