வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாணியம்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”யாரால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும், தற்போது யாரால் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.
பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு ஸ்டாலின் பரப்புரை செய்ததால்தான் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவினர் வெற்றிபெற்றனர். விவசாயக் கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொய் வாக்குறுதிகளைக் கூறி அனைவருக்கும் காது குத்திவிட்டார் ஸ்டாலின்.
குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் பொய் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றியே திமுக வெற்றி பெற்றது. அவர்கள் எங்களைவிட கொஞ்சம் மட்டுமே வெற்றிபெற்றனர். தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்ற ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நடக்காது.
அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லையென்று ஸ்டாலின் கூறுகிறார். பிறர் எழுதி கொடுத்ததைப் பாத்து பேசும் ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை பாத்திருக்கமாட்டார். அதனால்தான் அவர் அவ்வாறு பேசிவருகிறார்.
திமுக ஆட்சியில் 30 விழுக்காடு மட்டுமே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது 52 விழுக்காடாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் 22 விழுக்காடாக இருந்த குழந்தைகள் இறப்பு, அதிமுக ஆட்சியில் 16 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்காக 254 சுகாதார நிலையங்கள் அமைக்கப்ப்பட்டன.
திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டு மக்கள் கடுமையான மின்வெட்டால் தவித்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்வெட்டில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டது” என்றார்.