வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 6ஆவது தெருவில் சரவணன்(36) என்பவர் வசித்து வருகிறார். சரவணனும் அவரது மனைவியும், அவர்களது மகளின் பெற்றோர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள பள்ளிக்குச் சென்றனர்.
சந்திப்பு கூட்டத்தை முடித்துக் கொண்டு மதியம் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குளியலறையின் ஜன்னலை துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதற்குள் சரவணனின் மனைவி, பெற்றோர் சந்திப்பு கூட்டத்தை முடித்துக் கொண்டு சீக்கிரமாக வீடு திரும்பியதால், பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகை தப்பியது.
இதுகுறித்து சரவணனின் மனைவி கூறியதாவது, "நான் வருவதை அறிந்ததும் அடையாளம் தெரியாத நபர்கள் தப்பித்துச் சென்று இருக்க வேண்டும் என்றும், இதற்கு முன்னாடியே கடந்த மாதம் 26ஆம் தேதி எங்களுடைய வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து ஒரு மடிக்கணினி, 3 செல்ஃபோன்கள், இரண்டு சவரன் தங்க கம்மலையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தற்போது அதேபோல் இன்றும் நான் வெளியில் செல்வதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் நுழைந்து திருட முயற்சித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் மீதுதான் சந்தேகமாக உள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறையினர் இச்செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களை திருடியவர்களுக்கு காவல் துறையினர் வலை