வேலூர் அருகே சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. அதன் பின்னர், காட்பாடி காந்திநகரில் கல்வி மையம் ஒன்றில் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வேலுார் ஊரீசு கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் என்பவருக்கு பணி ஆணையை திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அனுப்பி உள்ளது.
அதன்படி அவர் நேற்று வேதியியல் விடைத்தாள்களை திருத்த வேண்டும்; பேராசிரியர் விஜயகுமார் திருத்த வேண்டிய விடைத்தாள் கட்டை எடுத்து விடைத்தாள் திருத்தும் மையத்தில் பலகை மீது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், விடைத்தாளை திருத்த எந்த ஒரு பேராசிரியர் வரவில்லை எனத் தெரிகிறது.
பின்னர், ஏன் வரவில்லை? என்ன காரணம்? என்று விசாரித்து பார்க்கும்பொழுது, பேராசிரியர் இருந்தால் தானே வருவதற்கு என்ற பதில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கிடைத்தது. பேராசிரியர் விஜய்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.
இதைக்கூட தெரிந்து கொள்ளாமல் பழைய பட்டியலை எடுத்து அப்படியே பணி ஒதுக்கீடு ஆணையிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே பல குளறுபடிகளில் சிக்கிய பல்கலைக்கழக நிர்வாகம், மீண்டும் ஒரு குளறுபடியில் சிக்கியுள்ளதுடன், இதை கேள்விப்படுபவர்கள் தலையில் அடித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு; நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு