வேலூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலை பணிகளில் அடங்கி உள்ள 1083 காலி இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தேர்விற்கு வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2823 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுத 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தத் தேர்வினை 1319 பேர் எழுதினர். 1504 பேர் தேர்விற்கு வரவில்லை. இந்த நிலையில், விருதம்பட்டு அப்துல் ரகுமான் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹபீஷ். இவரது மகன் அப்துல் பயாஷ் (வயது 27).
இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வினை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வு எழுதினார். அப்போது அவரது வலது காதில் பேண்டேஜ் ஒட்டிருந்தார். இது குறித்து அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தேர்வு கண்காணிப்பாளர் சரளா கேட்டபோது, காதில் ஏற்பட்ட காயத்திற்காக பேண்டேஜ் ஒட்டியிருப்பதாக அப்துல் பயாஷ் கூறி உள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தனியாக யாருடனோ பேசுவதை உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, சந்தேகத்தின் பேரில் அப்துல் பயாஷ் காதில் ஒட்டியிருந்த பேண்டேஜை அகற்றும்படி கூறி உள்ளார். அதன்படி, அவரும் பேண்டேஜை அகற்றிய போது தான் அப்துல் பயாஷ் காதில் புளூடூத் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் விசாரித்த போது புளூடூத் மூலம் வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து விடைகளை கேட்டு எழுதிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தேர்வு கண்காணிப்பாளர் சரளா அருகில் இருந்த காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் அப்துல் பயாஷ் தேடி வருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் இன்று அப்துல் பயாஷ் மீது சட்டப் பிரிவு 417 கீழ் (மற்றவர்களை ஏமாற்றுவது) வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இன்று விசாரணைக்கு காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்துல் பயாஷுக்கு காவல் நிலையத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ப்ளூடூத் ஹெட்செட் வைத்து தேர்வு எழுதியது போல் தேர்வு எழுதி சிக்கிய சம்பவம் தேர்வர்கள் மத்தியிலும், காட்பாடி பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:‘வசூல் ராஜா’ பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு - ட்ரான்ஸ்மீட்டர் மூலம் தேர்வெழுதிய மாணவர் கைது!