கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா முழுவதும் வங்கி, ஏடிஎம்களில் வரிசையில் நின்ற மக்களில் 126 நபர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்ற சிறப்புப் பாதுகாப்பினை மத்திய அரசு திரும்பப் பெற்றது கண்டிக்கத்தக்கது. மீண்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும். வரவிருக்கும் அயோத்தி தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் காப்பாற்றும் தீர்ப்பாக அமையும். இந்திய நாட்டு மக்கள் சாதி, மதம் பார்க்காமல் தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது...!