திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள காவலூர் பகுதியில் அண்ணாமலை என்பவர், "செண்பகதோப்பு டான்" என்ற காங்கேயம் வகையை சேர்ந்த காளையை வளர்ந்து வருகிறார். இவரது காளை கடந்து ஆண்டு ஆறு கிராமங்களில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்நிலையில், அணைகட்டில் நேற்று (ஜன.14) நடைபெற்ற எருதுவிடும் விழாவுக்கு தனது காளையை அண்ணாமலை அழைத்துச் சென்றார்.
அப்போது, அணைக்கட்டு சாலையில் சென்று கொண்டிருந்த காளை மீது, மினி லாரி மோதியது. இதில் காளையின் இடது பக்கம் உள்ள இரண்டு விலா எழும்பு முறிந்து, வயிற்று பகுதி கிழிந்து குடல் மற்றும் அசையூண் இரைப்பை(Rumen) வெளியே வந்தது.
இதையடுத்து, வேலூர் கால்நடை மருத்துவமனையில் காளை அனுமதிக்கப்பட்டது. அங்கு கால்நடை உதவி மருத்துவர்கள் ரவி ஷங்கர், அரேஷ், பிரதம மருத்துவர் ஜோசப் ராஜ் மற்றும் கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், காளைக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் காளைக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
நேற்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற அறுவை சிகிச்சையில், காளைக்கு மயக்க மருத்து அளிக்கப்பட்டு விலா எழும்பு பிளேட் வைத்து இணைக்கப்பட்டது. மேலும் வெளியே வந்த குடல் மற்றும் அசையூண் இரைப்பை பகுதியை மீண்டும் வயிற்றுப் பகுதியில் முறையாக வைத்து தைத்தனர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து காளை உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கால்நடை மருத்துவர்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையை வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் செய்து சாதித்துள்ளதாகவும், காளைக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். காளை முழுமையாக குணமடைய ஒரு மாத ஆகும் என்ற மருத்துவர்கள், எழும்பு இணைந்த பிறகு அதன் உடம்பில் உள்ள பிளேட்டை அகற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.