வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா லத்தேரியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 49). இவர் வாலாஜாப்பேட்டை அம்மூர் டாஸ்மாக் கடையில் விற்பனை மேற்பார்வையாளராகவும், அரக்கோணம் பழனிப்பேட்டை டாஸ்மாக் கடைகளில் கடை மேற்பார்வையாளராகவும் பணியாற்றிவந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, இரு டாஸ்மாக் கடைகளிலும் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று 12 லட்சத்து 78 ஆயிரத்து ரூபாயை மேற்பார்வையாளர் கார்த்திகேயன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இந்த கையாடல் தொடர்பில் நடைபெற்ற துறை சார்ந்த விசாரணையில் அவர், இந்த முறைகேடுகளை செய்வதற்காகவே இரண்டு பேரை வேலைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, வேலூர் டாஸ்மாக் கோட்ட மேலாளர் சேதுராமன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள குற்றப்பிரிவு காவலர்கள் தொடங்கியதை அறிந்துகொண்ட கார்த்திகேயன் உடனடியாக தலைமறைவாகிவிட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக கார்த்திகேயனை, காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் குறித்த எந்த துப்பும் துலங்காமல் மர்மமாகவே இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை லத்தேரி பேருந்து நிலையம் அருகே கார்த்திகேயன் நின்று கொண்டிருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம், ஆய்வாளர்கள் இலக்குவன், கலையரசி உள்ளிட்டோர் அங்கு சென்று கார்த்திகேயனை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை அரக்கோணம் கிளை நீதிமன்ற நீதிபதி லாவண்யா முன்பு முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திகேயனை வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : 91 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம் - விமான நிலையத்தில் பறிமுதல்!