வேலூர்: ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த இளம் சிறார் ஒருவரை சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மார்ச் 25ஆம் தேதி முயற்சி செய்தனர்.
அப்போது அந்த சிறார் பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி கீழே இறங்காமல் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக அட்டகாசம் செய்தார். பின்னர் வேலூர் இளஞ்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கீழே இறங்கினார்.
இந்த நிலையில் மார்ச் 27 ஆம் தேதி சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகள் என 6 பேர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய போது பாதுகாப்பு இல்ல ஊழியர்கள் மூன்று பேரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு இல்லம் முன் வேலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 50க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான வருவாய் துறையினரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் விசாரணை நடத்தினர். அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து இளம் சிறார்கள் ஆறு பேர் தப்பியோடிய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென நள்ளிரவில் சிறார் சீர்திருத்த பள்ளியின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு மனு கொடுக்க வந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "நாங்கள் தன்மானத்தை இழந்து பணி செய்கிறோம். எங்களை அவர்கள் மிகவும் சிறுமைப்படுத்துகிறார்கள். எங்கள் மீது தண்ணீர் ஊற்றியும், எங்களை தரக்குறைவாக பேசியும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். குமரவேல் என்ற பாதுகாவலரை சிறார்கள் கத்தியால் தாக்கினார்கள். அதனால் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும் என்ன நடந்தது என்பதை குறித்து துறை ரீதியாகவும் தொடர்பு கொண்டு கேட்கவில்லை. எங்களுக்கு என்ன நடந்தாலும் பணி நிரந்தரம் கிடையாது. அதாவது உயிர் இழந்தாலும் எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடையாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நள்ளிரவில் ஒரு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டோம். மனு கொடுக்க முயன்றோம். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் காலை அலுவலகத்துக்கு வந்து மனு கொடுங்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் நாங்கள் தர்ணாவை கைவிட்டோம்" என்றனர்.
இதையும் படிங்க: கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை: அரசு மெத்தனமாக செயல்படுவதாக புகார்!