வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் நமக்கு வழங்கக்கூடிய நிதியை நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை. எனவே நிதி எங்களுக்கு தேவை என்று கேட்கும் போது மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. பிறகு எப்படி ஸ்டாலின் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று புரியவில்லை. ஏனென்றால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது இதுவரை நான்கு ஆண்டுகாலம் எங்களுக்கு நிதியே வரவில்லை. அப்படி இருக்கும்போது அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று கூறுவது தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்த மேடையில் வேண்டுமானாலும் ஸ்டாலின் சொல்லட்டும் நாங்கள் நேரடியாக வந்து பதில் கூறுகிறோம். நாகரிகம் என்பதை எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று எனவே நாங்கள் நாகரிகத்தோடு பேசி வருகிறோம் என்றார்.
அதையடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை பொறுத்தவரை அண்ணா சொல்லிக்கொடுத்தது, 'யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்கும் போது பிறர் மனம் புண்படும்படி கருத்துகள் வெளிப்படக் கூடாது' என்பது எங்கள் லட்சியப் பயணம். இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எங்களது லட்சியம். இதற்காகத்தான், கடந்த மாதம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார் இருமொழிக் கொள்கை தான் எங்களது உயிர் மூச்சு" என்று தெரிவித்தார்.