வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 275 மெட்ரிக்குலேசன் மற்றும் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2022ஆம் ஆண்டு வரையிலான தொடர் அங்கீகார ஆணைகளை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன் இன்று (அக்.15) காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் எல்லா துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வெட்டு இல்லா மாநிலம், சட்ட ஒழுங்கை பேணிப் பாதுகாக்கக்கூடிய மாநிலம் எனப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து அவர், “அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஏழை எளிய மாணவர்களை கருத்தில் கொண்டும் கட்டாய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த அடிப்படையில் நவம்பர் வரையில் பள்ளி சேர்க்கையில் கால நீட்டிப்பு தரப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு மூவாயிரத்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் 934 கோடி ரூபாய் கட்டாய கல்வி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பலமுறை பிரதமரே நம்முடைய முதலமைச்சரைப் பாராட்டியுள்ளார்.
குடியாத்தத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் வேண்டும் என்று இம்மாவட்ட அமைச்சர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இக்கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நல்ல முடிவு எடுக்கப்படும்”என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வயதைக் குறைத்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "அரசு இது போன்ற முடிவுகளை மேற்கொள்ளும்போது கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அறிந்து தான் முடிவெடுக்கும். மாணவர்களுக்கு எந்த வயதில் எப்படிப்பட்ட கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தான் இது போன்ற முடிவுகள் அரசால் எடுக்கப்படுகிறது” என பதிலளித்தார்.
பள்ளிகள் திறப்பதை பொறுத்த வரையில் சூழல் மோசமாக உள்ளது எனத் தெரிவித்த அவர், ஆந்திராவில் பள்ளிகளைத் திறந்ததால் 26 மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டினார். கரோனா குறையும்போது தான் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியம் இல்லாத ஒன்று எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்க வேலைகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாகவே வைத்துள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த முடிவினை மாநில சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றி அதற்கான நடவடிக்கை முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார் என அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.சம்பத் மற்றும் துறை சார் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:1570 கோடி ரூபாய் வருமானம் எப்படி கிடைக்கும்? துணை வேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!