வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சண்முகம். இவர் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார் இந்த நிலையில் சண்முகம் கடந்த சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (மே 13) அதிகாலை சண்முகத்தின் வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அருகில் வசிப்பவர்கள் அவரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சண்முகம் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் பணம், 20 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சண்முகம் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர். அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அதுவும் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.