முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
எனவே, தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, முருகன் இருவரும் வேலூர் சிறையில் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களை விடுதலை செய்யக்கோரியும் இல்லாவிட்டால், கருணைக் கொலை செய்யும்படியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு, நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நளினி தொடங்கியுள்ளார்.
முன்னதாக, முருகனின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை கவனித்துக்கொள்ள பரோல் கோரி நளினி விண்ணப்பித்திருந்தார். அதை சிறைத்துறை ஏற்காததால் தங்களது விடுதலை, பரோல் ஆகியவற்றை வலியுறுத்தி தற்போது இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு நளினி உண்ணாவிரதம் இருந்தபோது, சிறைத்துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், அதை கைவிட்டார். தற்போது சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதால் அவரது உடல்நிலை மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: