வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முருகன் வேலூர் மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் ஆய்வுக்கு சென்ற பெண் காவலரிடம் அவதுராக நடந்துகொண்டதாக மத்திய சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4- ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று (பிப்.8) விசாரணைக்கு வந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகனை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்த போலீசார், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு பிறகு வழக்கு வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் போலீசார் பாதுகாப்புடன் முருகன் திருச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே, நீதிமன்ற வளாகத்தில் முருகனை, அவரது தாயார் சோ.மணி, மனைவி நளினி ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.