வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டும் வழக்கம் போல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயிலின்போது இங்கு அதிகபட்சமாக 115 பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், மக்களை மிரட்டிய கத்திரி வெயில் கடந்த 29ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனாலும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்றுக் கூட வேலூரில் 108 பாரன்ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், இன்று பிற்பகல் வேலூரில் திடீரென மழை மேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. அடுத்த சில நொடிகளில் வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, மோர்தானா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அதேபோல், லத்தேரி, வேலூர், சத்துவாச்சாரி, பொய்கை, ராணிப்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வேலூரில் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் இன்று பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.