வேலூர்: தமிழ்நாடு முழுவதும் காட்டன் சூதாட்டம்(Cotton Gambling) தடை செய்யப்பட்ட நிலையில், வேலூர் அடுத்த லத்தேரி காமராஜ் புரம் அப்பகுதியில் இந்த 3ஆம் நம்பர் 2ஆம் நம்பர் காட்டன் சூதாட்டம் நடத்திய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ரூபாய் கட்டினால் 70 ரூபாய் தரப்படும் என்றும், 70 ரூபாய் கட்டினால் 700 ரூபாய் வழங்கப்படும் என கவர்ச்சி கரமான விளம்பரங்களை அறிவித்து கூலி வேலைக்கு செல்லும் ஏழை, எளிய மக்களை லாட்டரி வலையில் விழவைத்து இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.
இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய மாவட்ட காவல் நிர்வாகம், இடைத்தரகர்களை மட்டும் கைது செய்துவிட்டு. சூதாட்டம் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கமல் தயக்கம் காட்டுவது வேதனையளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கண்டுகொள்ளமல் இருக்கிறதா காவல்துறை?: வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த காட்டன் சூதாட்டத்தை தடுக்க அப்பகுதி காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதற்குக் காரணம், காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மாதம் தவறாமல் லட்சக்கணக்கில் பணம் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, அவ்வப்போது இந்த சூதாட்ட கும்பலிடம் இருந்து வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு மற்றும் நகர குற்றப்பிரிவில் உள்ளவர்கள் கேரளா லாட்டரிச் சீட்டுகளை மட்டும் பறிமுதல் செய்து அவர்களின் உயர் அதிகாரிகளிடம் கொடுத்து நல்ல பெயர் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த காட்டன் சூதாட்டம் நடத்தும் சமூக விரோதிகளை கண்டும் காணாமல் இருப்பதால் பல குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துள்ளன என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது வெளியான இந்த காட்டன் சூதாட்டம் ஆடிய வீடியோவைத் தொடர்ந்து, இனியாவது மாவட்ட காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்க வேண்டும். நேர்மையான காவல் அதிகாரிகளை நியமனம் செய்து இவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!