வாகன விபத்தை தடுக்கும் நோக்கில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதிலும் அமலுக்கு வந்தது. இந்த புதிய விதியின் கீழ் சாலை விதிகளை மீறுவோர்க்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையிலும், கடும் தண்டனை வழங்கும் வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய சட்டத்தின்படி அபராதம் விதித்து வருகின்றனர். இதில் குறிப்பாகத் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் அபராதத்திற்கு பயந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தை அணிந்து செல்கின்றனர். இருப்பினும் சிலர் தலைக்கவசம் அணியாமல் வந்து காவல் துறையிடம் சிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒழுங்காக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை திருப்பத்தூர் காவல் துறையினர் புதிய வகையில் கௌரவித்துள்ளனர். திருப்பத்தூர் நகருக்கு வெளி ஊர்களில் இருந்தும், பல கிராமங்களில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆவர்.
இந்நிலையில் திருப்பத்தூர் நகரில் உள்ள சிக்னலில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சால்வை அணிவித்து துணைக்காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் மதனலோகன், திருப்பத்தூர் நகரத் துணைக்காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் சரக துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் கூறுகையில், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதத் தொகை 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் 1000 ரூபாய் அபராதத்தை தவிர்க்க தலைக்கவசத்தை அணிந்து கொள்ளலாம்.
அபராதத் தொகைக்கு மட்டும் பயந்து தலைக்கவசம் அணியாமல் உங்களை நம்பி மனைவி, பிள்ளைகள் உள்ளனர் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்று கூறினார்.