வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பிரகாசம் (49). இவரது மனைவி ரமா (43). பிரகாசம் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் பீடி சுற்றும் வேலையையும் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 13ஆம் தேதி பிரகாசம் தனது மனைவி ரமாவிடம், காங்கேயநல்லூரில் மோட்டார் ஒன்றைப் பழுது பார்ப்பது தொடர்பாக செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால், இரண்டு நாட்களாகியும் பிரகாசம் வீடு திரும்பாததால் ரமா, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கணவனைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.
இதற்கிடையில் காங்கேயநல்லூர் பெருமாள் கோயில் அருகே பாலாற்றங்கரையோரமாக உள்ள விவசாயக் கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்குச் சென்ற விருதம்பட்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 2 நாட்களுக்கு முன்பு சத்துவாச்சாரி பகுதியில் காணாமல் போன பிரகாசம் என்பவரது சடலம் தான் என தெரிய வந்தது. பிரகாசத்தின் மனைவி ரமா கூறுகையில், தனது கணவர் கடந்த 10 நாட்களாக வீட்டில் சரிவர சாப்பிடாமலும்; யாருடனும் சரிவர பேசாமலும் இருந்தார். அவருக்கு வீட்டில் இருப்பவர்களைத் தவிர, வேறு யாருடனும் பழக்கம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
பிரகாசம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலை பார்க்கும் போது ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மைதானத்தில் ஆண் சடலம் - திருவள்ளூரில் பரபரப்பு!