வேலூர்: குடியாத்தம் நகர், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதனால் குடியாத்தம் நகரில் பேருந்து நிலையத்தில் அருகில் குடியாத்தம் நகர போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அவர் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றார். அதன் பின்னர், போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் அவரை துரத்திச் சென்று பிடித்தபோது அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர் குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த தரணி என்பதும் இவர் குடியாத்தம் பள்ளிகொண்டா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் விலை மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ஸ்ப்ளெண்டர், யூனிகார்ன் போன்ற விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களை இவர் திருடி வந்து குடியாத்தம் அருகேயுள்ள கல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஞானவேல் என்பவரிடம் கொடுத்து, இவர்கள் இந்த இருசக்கர வாகனங்களை ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வாகனங்களை விற்றதும், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதன் பின்னர், செய்தியாளர் ஞானவேல் வீட்டில் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மூன்று நாட்களுக்கு போலீசார் காவலில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர், சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி ஆகியோர் குடியாத்தத்தில் முகாமிட்டு வழக்கை வேகப்படுத்தியுள்ளனர்.
இதில் திருடப்படும் இருசக்கர வாகனங்களில் சாலையில் செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலியை அறுத்துச்செல்லும் கும்பலும் சிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் என்ற போர்வையில் பல பகுதிகளில் நோட்டமிட்டு இருசக்கர வாகனங்களை திருடி வந்தது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் பைக்கில் இருந்து பெட்ரோல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி!