அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
'கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டுக்கு வந்ததே கிடையாது. ஒரே ஒருமுறை மக்களுக்குப் பயந்து திருட்டுத்தனமாக ஐஐடி வளாகத்துக்குள் வந்துவிட்டுச் சென்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்கள் தொங்கவிடப்பட்டன.
தமிழ்நாட்டில் கஜா புயல், ஒக்கி புயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டபோது, மத்திய அரசு எந்த நிவாரணமும் தரவில்லை. ஆனால் தற்போது தேர்தல் வந்தவுடன் மக்களை ஏமாற்றுவதற்காக மோடி வருகிறார்.
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடுபுடியாக உள்ளனர். ஒரு துணை முதலமைச்சரை பார்த்து அன்புமணி ராமதாஸ் டயர் நக்கி என்று கூறினார்.
இதேபோல் முதல்வரை பார்த்து கவுன்சிலருக்கு கூட லாயக்கில்லாதவர், ஒன்றும் தெரியாத மக்கு என்று சொன்னார். இதை தற்போது சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.
என்னைப் பார்த்து அன்புமணி ஸ்டாலினின் கொடுக்கு என்கிறார். ஆமா நான் கொடுக்குதான். நான் கொட்ட கொட்ட வலிக்கிறது அல்லவா?
மருத்துவர் ராமதாஸ் மிகவும் நல்லவர். அவருக்கு இந்த கூட்டணி மீது விருப்பம் இல்லை. அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவருக்கு தெரியும் பாஜகவும் அதிமுகவும் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.
பரப்புரைக் கூட்டத்தில் பேசும்போது கூட அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று கூறினார். இப்போது ஏமாற்றம் தடுமாற்றம் சூட்கேஸ் அன்புமணி என பலரால் கூறப்படுகிறது.
எனது ஆட்சியில்தான் அதிக போராட்டம் நடைபெற்றது என்று முதலமைச்சர் சாதனையாக சொல்கிறார். போராட்டம் என்றாலே மக்கள் பிரச்னையில் உள்ளார்கள் என அர்த்தம். எனவே இதற்கு பெயர் சாதனையா? இது கூட தெரியாத ஒரு மக்கு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ளார்' என தெரிவித்தார்.