வேலூர்: அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் உக்கிரகாளியம்மன் கோயில் திருவிழா நேற்று (மே 24) நடந்தது. இதில் கோயில் விழா முடிந்து இரவு 7 மணிக்கு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வெளியூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடன நிகழ்ச்சியில் ஆபாசமான உடையில் கையில் மதுபாட்டில்கள், சிகிரெட் போன்ற போதைப்பொருட்களை வைத்து ஆபாசமான நடனமாடினர். இதனைக் கண்ட அப்பகுதி பெண்கள் முகம் சுழித்தனர். ஒரு சில பெண்கள் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக கூறி அங்கிருந்து எழுந்து சென்று விட்டனர்.
இது குறித்து பெண்கள் கூறுகையில், “திருவிழாவிற்காக நடத்தப்படும் நடன நிகழ்ச்சியில் சாமி பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் இருக்கும் என நம்பி வந்தோம். ஆனால், இங்கு கோயில் திருவிழாவில் ஆபாசமான நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், பெண்களே கையில் போதைப் பொருட்களை வைத்து குடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்ற அநாகரியமான நிகழ்ச்சி நடைபெருகிறது.
இது அடுத்த தலைமுறை பெண்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளப்படும். எனவே இதுபோன்ற கோயில் திருவிழாவில் ஆபாசமான நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். மேலும், ஆபாசமான நடன நிகழ்ச்சி என்றால் அதை காவல் துறையினரே தடுத்த நிறுத்தும் அதிகாரம் இருந்தும் பல பெண்கள் இருக்கின்ற இடத்தில் போதைப் பொருட்களை வைத்து நடனம் ஆடும் போது அமைதியாக அவர்களும் கண்டு ரசித்துக்கொண்டு இருப்பது மக்களிடையை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க , உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் திருவிழாக்களுக்கு நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மதுரையை சுற்றியுள்ள மக்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் M.S. ரமேஷ் மற்றும் ஆஷா அமர்வு முன் நேற்று (மே 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கலைநிகழ்ச்சிகள் நடத்த காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தும் உரிய பதில் இல்லாததால், நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுக்கள் மீது பதிலே கூறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே ஆடல்-பாடல் , கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், ஏழு நாட்களுக்குள் காவல் துறை அதிகாரி பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும். அல்லது அனுமதி இல்லை என தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்க அனுமதி? - போலீசாருக்கு புதிய உத்தரவு..