கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று (நவ. 25) இரவு அல்லது நாளை காலைக்குள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதி வழியாக நிவர் புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சேண்பாக்கம் மாங்காய் மண்டி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சிப் பணியாளர்கள் தூர்வாரினர். வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "நிவர் புயல் காரணமாக வாகனங்களை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டவும், பலத்த காற்று அடிக்கும் நேரத்தில் வாகனத்தைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு பிறகு செல்லவும்" என டிஜிட்டலில் அறிவிக்கப்படுகிறது.
வேலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ உதவிக்காக மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்ணமங்களம், கண்ணியம்பாடி இடையே உள்ள சாலைகளின் பள்ளங்களை செங்கல் வைத்து சீர்செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு தாழ்வான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து கொணவட்டம், காட்பாடி வட்டம் கரிகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "வேலூரில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும். மறு உத்தரவு வரும் வரையில் போக்குவரத்து நிறுத்தப்படும். கூடுதலாக இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது.
மாவட்டத்தில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிசைகளில் வாழ்ந்துவந்த 164 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள 10 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்!