தமிழ்நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், திமுக கட்சி சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி, தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தீபலட்சுமி ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.