வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை பெற்றுவருகிறார்.
நளினி தனது தாயார் பத்மாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காகத் தனக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். விசாரணையில், நளினிக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையிலுள்ள நளினி இன்று (டிசம்பர் 27) காலை, 30 நாள்கள் பரோலில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வெளியே வந்தார்.
இவர் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் தனது தாய் பத்மா இருக்கும் வீட்டில் தங்கியுள்ளார். அப்பகுதியில் சுழற்சி முறையில் இரண்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 50 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினி பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களைச் சந்திக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழ்நாடு அரசு முடிவு