முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக கடந்த ஜுலை 25ஆம் தேதி ஒரே மாத பரோலில் சென்றார். பின்னர் அவரது பரோலை 21 நாட்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நளினியின் பரோல் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
பரோல் முடிவடைய உள்ள நிலையில், வேலூர் மத்திய சிறையிலிருக்கும் தனது கணவர் முருகனை நேரில் சந்திக்க சிறை நிர்வாகத்திற்கு மனு அளித்திருந்தார். முதலில் அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், பின்னர் அனுமதி வழங்கப்பட்டு இன்று இச்சந்திப்பு நடைபெற்றது. இதற்காக வேலூர் சத்துவாச்சாரியில் கட்சி பிரமுகர் வீட்டில் பரோலில் தங்கியுள்ள நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒருமணி நேர சந்திப்பிற்கு பிறகு நளினியை காவல் துறையினர் சத்துவாச்சாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதனிடையே இலங்கையில் உள்ள முருகனின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அவர் சென்னை வரவிருப்பதாகவும் தனது தந்தையுடன் இருந்து அவரை கவனித்துக்கொள்ள ஒரு மாதம் பரோல் கோரி கடந்த மாதம் 31ஆம் தேதி வேலூர் சிறைத் துறைக்கு முருகன் மனு அளித்திருந்தார். அவரது மனுவை சிறைத் துறை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.