முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியும் சுமார் ஐந்து மாதத்திற்கும் மேலாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தங்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகன் கடந்த 2-ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி, 'அப்படி மனு எதுவும் அளிக்கப்படவில்லை' என கூறி மறுத்துவிட்டார்.
பின்னர் முறைப்படி மனு அளித்து முருகன் உண்ணாவிரத்தில் ஈடுபட்டார். தனது கணவர் முருகனுக்கு ஆதரவளிக்கும் விதமாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அவரது மனைவி நளினியும் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் நளினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று அவர்களை சந்திக்க வேலூர் சிறைக்குச் சென்றார். அவர்கள் இருவரையும் சந்தித்துவிட்டு வெளியே வந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய புகழேந்தி, "முருகன் கடந்த 2-ஆம் தேதி முதல் தனது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து இன்று சிறைத்துறையினர் வலுக்கட்டாயமாக முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
'நான் இறந்துவிட்டால் எனது உடல் உறுப்புகளை ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு தானம் செய்யுங்கள்' என தமிழக அரசுக்கு முருகன் கோரிக்கை வைத்து சிறை கண்காணிப்பாளருக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நளினியை பொறுத்தவரை அவரை இன்று பார்க்க செல்லும்போது அவர் நடக்கமுடியாமல் சோர்வாக இருந்தார். சிறைக்காவலர் தான் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். சிறை அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டாலும் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என இரண்டு பேரும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி சரியாக நடந்துகொள்ளவில்லை, உண்ணாவிரதம் தொடர்பாக முருகன் முன்கூட்டியே அனுமதி கேட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் கூறியுள்ளார். அதனால்தான் இந்த முறை முருகன் முன் அனுமதி கேட்காமல் உண்ணாவிரதம் இருக்கிறார். இவர்களின் உண்ணாவிரதம் நியாயமானது. எனவே சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.