வேலூர்: கே.வி.குப்பம் வட்டம் செஞ்சி கிராமத்தில் 40வது ஆண்டாக காளை விடும் திருவிழாவானது நடைபெற்றது. இந்த திருவிழாவில் வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமனேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து ஓடின.
காளை மாடுகளை முழு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். காளைகளை அடக்கியவர்களுக்கு விழாக் குழு சார்பில் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, டிவி உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி, பிடிபடாமல் பரிசுகளைத் தட்டிச் சென்றன. ஒரு சில மாடுகள் தன்னை நெருங்க விடாமல் சுழன்று சுழன்று வீரர்களை சிதறடித்தன. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆரவாரத்துடன் காளை பாய்ந்து ஓடியதை ரசித்துப் பார்த்து மகிழ்ந்தனர்.
சில மாடுகள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றி வந்தன. முக்கிய பிரமுகர்கள் வளர்க்கும் காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னே வந்தனர். இந்த நிகழ்வில் இளம்பெண்கள் சிலர், தங்கள் காளைகளைப் போட்டிக்கு அழைத்து வந்தனர். அவை வெற்றி பெற்றதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
காளை முட்டியவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், முதல் பரிசு பெறும் காளைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும், 2வதாக வந்த காளைக்கு 80 ஆயிரம் ரூபாயும், 3வதாக வந்த காளைக்கு 70 ஆயிரம் ரூபாயும், பின்னர் வந்த 50 காளைகளுக்கு பல்வேறு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
காளை விடும் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி மூலமாக செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்களும் உற்சாகத்துடன் இந்த காளை விடும் திருவிழாவினை பார்த்து ரசித்தனர். காளை மாடு ரசிகர்களும் தமிழ்நாடு ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காளை விடும் திருவிழாவை ரசித்தனர்.
இதையும் படிங்க: நிலக்கோட்டையில் நடந்த ‘கிடா முட்டு’ போட்டி - பரிசுகளை அள்ளிச் சென்ற கிடா உரிமையாளர்கள்!