வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது செயின்ட் ஜோசப் ஆலயம். இங்கு பாதிரியாராக இருப்பவர் மலையப்பன் (வயது 60).
இவர் நேற்று (நவ.23) இரவு ஒன்பது மணியளவில் செயின்ட் ஜோசப் ஆலயத்தின் உள்ளே இருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர் அங்கு வந்து, தாங்கள் வாங்கியுள்ள புது வாகனத்திற்கு "பிளெஸ்ஸிங் செய்யுங்கள்" எனக் கூறி அவரை ஜன்னல் வழியே வெளியே அழைத்துள்ளனர்.
தொடர்ந்து மலையப்பன் வெளியே சென்றபோது, கத்தியைக் காண்பித்து அவரை மிரட்டி, அவரது முன்நெற்றியில் தாக்கியுள்ளனர். பின்னர், அறையினுள் இருந்த நாற்காலியில் அவரைக் கட்டி வைத்துவிட்டு, பீரோவில் இருந்த ஒன்பது லட்சம் ரூபாய் பணம், நான்கு சவரன் செயின் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இதில் பாதிரியாருக்கு முன்பக்க நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அவரே தனது கட்டை அவிழ்த்துக் கொண்டு, சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.