திருப்பத்தூர் மாவட்டம் களர்பதி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பலராமன்( 13) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று அதே பகுதியில் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் இறந்தநிலையில் மிதந்துள்ளார். இதை கண்ட சிறுவனின் உறவினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வளார் மதனலோகன் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினரிடம் இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், காவல்துறை ஆய்வாளர் மதனலோகன் இறுதி சடங்கிற்காக நிதியுதவி வழங்கினார்.
இதையும் படிங்க:ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை