வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில், இன்று (செப். 26) மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், மின்கலனில் (battery) இயங்கும் சக்கர நாற்காலிகள், காது கேளாதவர்களுக்கான கருவிகள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று காலகட்டத்தில் பத்திரப்பதிவுத் துறையின் வருவாய் 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு குறைந்ததாகவும், தற்போதுதான் அதன் வருவாய் 10 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சோளிங்கரில் கட்டப்பட்டுவரும் அரசு கல்லூரி இந்தாண்டு செயல்பாட்டிற்கு வரும் எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் முதலமைச்சர் இக்கல்லூரியினைத் தொடங்கிவைப்பார் என்றார்.
மேலும், சசிகலா குறித்து கருத்து தெரிவித்த அவர், 'சசிகலாவை எதிர்த்துதான் ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுவருகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர்கள்' என்றார்.
இதையும் படிங்க: மோடி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - முனைவர் திருமாவளவன் எம்.பி.