2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, முந்திரி போன்றவை அடங்கிய பரிசுத் தொகுப்பு, ரூ.2 ஆயிரத்து 500 பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு
இதனைத் தொடர்ந்து, வேலூரில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் இன்று (ஜன. 04) இத்திட்டத்தினை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
அதிமுகவின் திட்டங்கள்
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "முதலமைச்சர் கடந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியதை போன்றே, இந்த ஆண்டும் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு ஆகியவற்றை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், இன்று வேலூரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள 4 லட்சத்து 21 ஆயிரத்து 339 பேருக்கு வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. விடுபட்ட அட்டைதாரர்கள் பொங்கல் முடிந்த பிறகு பெற்றுக்கொள்ளலாம்.
எம்ஜிஆர் தொடக்கி வைத்த சத்து உணவு திட்டத்தில் தொடங்கி தாலிக்கு தங்கம், சைக்கிள், மடிக்கணினி வழங்கும் திட்டம் என அனைத்து திட்டத்தையும் திமுகவினர் விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.
திமுகவின் வாடிக்கை
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பணமாக ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கும் திமுகவினர் நீதிமன்றத்தை நாடினர். அதேபோல், இந்தாண்டு 2 ஆயிரத்து 500 வழங்கியதற்கும் அந்த தொகை போதாது 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்கின்றனர். குற்றம் சொல்வதும் ஏளனம் போசுவதும், குறை சொல்வதும் திமுகவின் வாடிக்கை" என்றார்.
இதையும் படிங்க: 'அராஜக கட்சி திமுக' - அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சனம்!