வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.04) வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பவர் டில்லர் மற்றும் கலை எடுக்கும் பவர் வீடர் இயந்திரங்களை அரசு மானியத்தில் வழங்கும் திட்டத்தைக் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சியை நடத்தப் போகிறாரா அல்லது அமெரிக்காவைப் போல் பிரசிடெண்ட் டைப் கவர்மெண்ட் கொண்டு வரப் போகிறாரா, அதேபோல் தேர்தலை உடனே கொண்டு வரப் போகிறாரா, தேர்தலைத் தள்ளி வைக்கிறார் என்னன்னு தெரியலை திடீரென கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.
ஆனால் ஒன்று அது மட்டும் நன்றாகத் தெரிகிறது, தேர்தல் விரைவில் வர இருக்கிறது, சட்டப்பேரவையும், நாடாளுமன்றமும் சேர்ந்து வருமா என்பது மட்டும்தான் இப்பொழுது கேள்விக்குறி. நாம் பெரிதாக நினைத்து வரும் சட்டப்பேரவையும், நாடாளுமன்றமும் சேர்ந்தே வருவதாக நினைத்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சரண்டர்; அரசியல் நெருக்கடி காரணமா?-அண்ணாமலை பேட்டி!