வேலூர்: தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் மயானக்கொள்ளை (Mayana Kollai) திருவிழா மாசி மாதம் மகா சிவராத்திரியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், பென்னாத்தூர், பொய்கை, குடியாத்தம், லத்தேரி உட்படப் பல பகுதிகளிலும் மயானக்கொள்ளை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அதன்படி வேலூரில் இன்று காலை ஓல்டுடவுன், மக்கான், கொணவட்டம், சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, தோட்டுப்பாளையம், அருகந்தம்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து அங்காளம்மன் புஷ்பப் பல்லக்குகள் பவனியாக பாலாற்றங்கரைக்கு வந்தன. அதேபோல் மதியம் 1.30 மணிக்கு மேல் காட்பாடி சேனூர், கழிஞ்சூர், விருதம்பட்டு, மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அங்காளம்மன், உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லக்கில் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
இந்த ஊர்வலத்தில் அங்காளம்மன், காட்டேரி, முனீஸ்வரன், கருப்பண்ணசுவாமி, காளி, ஆஞ்சநேயர், முருகன் என்று பல்வேறு கடவுள் வேடங்களைத் தரித்து பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தொடர்ந்து பாலாற்றில் படுத்த நிலையில் மண்ணால் அமைக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து சூறையாடல் நிகழ்ச்சி நடந்தது. சூறையாடலின்போது பொரி உருண்டை, எலுமிச்சை, பொரி, கடலை, பழங்கள் வீசப்பட்டன.
இதனைப் பக்தர்கள் பக்தியுடன் சேகரித்தனர். இதன்மூலம் குழந்தையின்மை, தீராத நோய் போன்ற பிரச்னைகள் தீர்வதாகப் பக்தர்களின் நம்பிக்கை. இத்திருவிழாவுக்காக வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில், ஏடிஎஸ்பி பாஸ்கரன், காட்பாடி டிஎஸ்பி பழனி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சிவன், பார்வதி, காளி, உள்ளிட்ட பல்வேறு, வேடங்கள் அணிந்த பக்தர்கள், ஊர்வலத்தில் பங்கேற்று தங்களுடைய நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ஈசான்ய மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மயானக்கொள்ளை விழா, அங்காளம்மன் வீதி உலா நடந்தது.
இதையும் படிங்க: தி.மலை மயானக் கொள்ளையில் மோதல்.. 3 பேருக்கு மண்டை உடைப்பு!