வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்(35). இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில், மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. பின்னர், கடந்த ஜூன் 4ஆம் தேதி சவூதி சென்றுள்ளார் சுந்தர். இவர் பணிக்குத் திரும்பிய நிலையில் இவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 9ஆம் தேதி காலையில் வழக்கம் போல் தன் மனைவியிடம் தொலைபேசியில் உரையாடியப் பின், பணிக்குச்சென்ற சுந்தர் மாலை 4 மணிக்கு மாரடைப்பால் இறந்துவிட்டார் என சக ஊழியர்கள் சுந்தரின் உறவினருக்கு தொலைபேசியின் மூலம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சுந்தரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கடந்த 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் சவூதியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிற நிலையில் சுந்தர் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தொழிற்சாலையின் மேலாளர், உரிமையாளர்கள் விடுமுறையில் உள்ளனர். இதன் காரணத்தால் சுந்தரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர சற்று காலதாமதம் ஆகின்ற நிலையில் அவரது நிறைமாத மனைவி, உறவினர்கள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.