வேலூர்: 2015ஆம் ஆண்டு வேப்பங்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் (26), அவரது கூட்டாளிகள் ஏழு பேர், செம்மரக் கடத்தல் தொடர்பாக குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின் கை கலப்பாக மாறியது.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது சரவணன் கொலைசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
ஒருவர் கைது
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர், கடந்த ஆண்டு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறியது.
இதனை விசாரிப்பதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மேற்பார்வையின்கீழ், வேலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்திருந்த நிலையில், இரண்டு பேர் முன்பிணை பெற்றனர்.
இதில் முக்கியக் குற்றவாளியான அணைக்கட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 22) தனிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அமைச்சரவைப் பட்டியலில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏவின் பெயர்!